இலங்கையில் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் கொள்கை அறிக்கை

[ English | සිංහල]

முதலாளித்துவம் உலகம் பூராவும் இளைஞர்களுக்கு அனு ஆயுத உலகப் போரின், ஒடுக்குமுறையின், வறுமையின், வேலையின்மையின் மற்றும் சமூக தரித்திரத்தின் எதிர்காலத்தையே உரிமையாக்கி இருக்கின்றது. இலங்கை உட்பட இந்திய உபகண்ட பிராந்தியமானது, உலகத்தில் அதிகளவான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள பிராந்தியமாகும். ஒட்டு மொத்த ஆசியாவும் உலக யுத்தம் ஒன்றை கிளறிவிடக் கூடிய புவியரசியல் பதட்டங்களால் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது.

நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்திலான புரட்சிகரமான ஆபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட உலக உற்பத்தியின் இலாபங்களை பெரும்பான்மை மக்களிடம் இருந்து முதலாளித்துவம் அபகரித்துக்கொண்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளின் இலாபத்துக்காக உற்பத்தி செய்யப்படும் தனியார் சொத்து உடமைக்கும் முதலாளித்துவம் வேரூன்றி இருக்கின்ற முதலாளித்துவ தேசியவாத முறைமைக்கும் மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கும் இடையில் காணப்படும் முதலாளித்துவத்தின் அடிப்படையான பரஸ்பர முரண்பாடு, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் மனித சுபீட்சத்திற்கும் தடையாக இருக்கின்றது.

இந்த பரஸ்பர முரண்பாடுகளில் இருந்து மீள்வதற்கு முதலாளித்துவத்திடம் முற்போக்கான தீர்வு கிடையாது. முதலாளித்துவ முறைமைக்குள்ளேயே நிலவும் இந்த பரஸ்பர முரண்பாடே, நிதி நெருக்கடியின் வடிவில் 2008ல் வெடித்தது. முதலாளித்துவம் இனிமேலும் தொடரும் எனில், அனு ஆயுத மூன்றாம் உலகப் போரின் மூலம் முழு மனித நாகரீகமே அழிந்து போகும் ஆபத்தை மனித குலம் எதிர்கொள்ள நேரும்.

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பானது இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமாகும். இலங்கையில், இந்திய துணைக் கண்டத்தில் மற்றும் ஒட்டு மொத்த ஆசியாவிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் வென்றெடுப்பதற்கே சோ.ச.க. உடன் சேர்ந்து IYSSEயும் போராடுகின்றது.

IYSSE கோரிக்கைகள்

ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்த்திடு!

மனித இனம் மீண்டும் ஒரு முறை போர்களதும் புரட்சிகளதும் காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் காவலர்களான இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள போலி இடது கட்சிகள், ஏகாதிபத்திய போர் அச்சுறுத்தலை இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மூடி மறைக்க முயற்சிக்கின்றன. IYSSE, யுத்தத்துக்கு எதிரான போராட்டத்தை தனது அரசியல் வேலைகளின் உச்சத்தில் வைத்துள்ளது. யுத்தத்துக்கு எதிரான போராட்டம் இன்றி சோசலிசத்துக்கான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியாது. அதே போல், சோசலிசத்துக்கான போராட்டம் இன்றி ஏகாதிபத்திய போரை தடுக்க முடியாது. முதலாளித்துவ நெருக்கடியின் முதிர்ந்த வெளிப்பாடான யுத்தம், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை துரிதமாக்கி, சமூக புரட்சிக்கு வழியமைக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய சமநிலையை முழுமையாக தகர்த்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுக்கும் ஈவிரக்கமற்ற போர் முனைவுகளும் பொருளாதார பாதுகாப்புவாதமும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டுள்ள உலக வரலாற்று நெருக்கடியின் வெளிப்பாடாகும்.

ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்துக்காக மேற்கொள்ளும் இடைவிடாத போர் முயற்சிகள் இப்போது சீன மற்றும் ரஷ்யாவுடன் வெளிப்படையான யுத்தம் ஒன்று வெடிக்கும் விளிம்புக்கு வந்துள்ளன. வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் மற்றும் மத்திய கிழக்கிலான போர் ஆக்கிரிமிப்புகளின் இறுதி குறிக்கோள், சீனாவும் ரஷ்யாவுமே ஆகும்.

சீனாவை பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள “ஆசியாவில் முன்னிலை” என்ற புவி மூலோபாயத்துக்குள் இந்திய ஆளும் வர்க்கத்தையும் இராணுவத்தையும் முன்னணி பங்காளிகளாக இணைத்துக்கொண்டு, பிராந்தியத்தில் புவியரசியல் பதட்டங்களுக்கு மேலும் எரியூட்டியுள்ளது. அதன் விளைவாக நீண்ட கால எதிரிகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்ட நிலைமைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் போரின் விளிம்புக்கே வந்தன.

பிராந்தியத்தில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனைத்து இராணுவ முகாங்களையும் அதே போல் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆளும் வர்க்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஏற்படுத்திக்கொண்டுள்ள இராணுவ உடன்படிக்கைகளையும் அகற்ற வேண்டும்.

பிராந்தியத்தில் ஆளும் வர்க்கங்களால் தூண்டி விடப்படும் தேசியவாத மற்றும் இனவாத பிளவுகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் சமரசமின்றி எதிர்க்க வேண்டும். தமது பொது எதிரியான ஏகாதிபத்தியத்துக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிராக அனைத்துலக சோசலிச முன்னோக்கின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது.

எரியும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சோசலிச வேலைத் திட்டம்.

ஏகாதிபத்திய போர் முனைப்புகளுடன் அணிதிரண்டுள்ள இலங்கையிலும் பிராந்தியத்திலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிராக சமூக எதிர்ப்புரட்சி ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்தி, இலங்கையில் தொழிலாள வர்க்கம் கடந்த காலத்தில் வென்றெடுத்த மட்டுப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளையும் ஏனைய சலுகைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளையும் கடந்த பல தசாப்தங்கள் பூராவும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இடைவிடாது வெட்டித்தள்ளி வந்துள்ளன.

இலங்கையில் பாடசாலை செல்ல வேண்டிய பிள்ளைகளில் நூற்றுக்கு 9.9 வீதமானவர்கள் அதாவது 452,661 பேர் பாடசாலை செல்வதில்லை என்றும், அதில் 51,249 சிறுவர்கள் ஒரு காலமும் பாடசாலைக்கு சென்றிருக்கவில்லை என்றும், ஆட் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் “2016 சிறுவர் செயற்பாட்டு ஆய்வு” அம்பலப்படுத்துகின்றது. 15-17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் நூற்றுக்கு 39.7 வீதம் என்ற பிரமாண்டமான அளவானவர்கள் பாடசாலை செல்வதில்லை என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

ஒட்டு மொத்த தெற்காசிய ஜனத்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் இந்தியாவில் உள்ளனர். இந்த ஆண்டில் பூகோள பட்டினி வீதத்தின் படி, இந்தியாவில் 6 மாதம் முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்களில் நூற்றுக்கு 9.6 வீதமானவர்கள் மட்டுமே போதுமானளவு உணவைப் பெறுகின்றனர். இந்தியத் துணைக்கண்ட பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களில் நூற்றுக்கு 1 வீதத்துக்கும் குறைவானவர்களே பல்கலைக்கழக கல்வியைப் பெறுகின்றனர்.

இலங்கையிலும் பிராந்தியத்திலும் வாழும் மக்களின் பட்டினி, வீடு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக நலன்புரி சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நூற்றுக்கணக்கான கோடி நிதி செலவிடப்பட வேண்டும். தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் சுரண்டி நூறு கோடீஸ்வரர்களை உருவாக்குகின்ற வெளிநாட்டு கடன் மற்றும் அரச கடனை திருப்பிச் செலுத்துவதை இரத்துச் செய்ய வேண்டும். பத்தாயிரம் கோடி டொலர்களையும் விஞ்சும் வருடாந்த போர் செலவுகளை இன்றியமையாத சமூக நலன்புரி சேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும்.

இதை இட்டுநிரப்ப வேண்டுமெனில், யுத்தத்தின் மூலம் இலாபத்தைக் குவித்துக்கொண்டு உலகப் பொருளாதாரத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் ஒட்டுண்னி பெரும் வங்கிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்தப்பட வேண்டும்.

உலகம் பூராவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அடிப்படையில் ஒரேவிதமானவை ஆகும். ஏகாதிபத்திய இலாப முறைமைக்கு கட்டுண்டுள்ள பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ஆளும் வர்க்கங்களும், இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் இந்தியாவில் ஸ்டாலினிச கம்யூனிசக் கட்சிகள் போன்ற முதலாளித்துவ தேசியவாத ஆமைப்புகளும் தூக்கிப் பிடித்துவரும் முதலாளித்துவ தேசியவாத வேலைத் திட்டங்களை தொழிலாளர்களும் இளைஞர்களும் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என IYSSE கூறுகின்றது.

சமூக சமத்துவத்துக்காக!

உலக மக்கள் தொகையில் வறுமையில் வாடும் அரைவாசிப் பேர், உலக செல்வத்தில் பெற்றுக்கொள்ளும் அளவு நூற்றுக்கு 1 வீதத்தையும் விட குறைவாகும். அதே வேளை, உச்சத்தில் இருக்கும் நூற்றுக்கு 10 வீதத்தினராக உள்ள அதிசெல்வந்தர்கள் உலக செல்வத்தில் நூற்றுக்கு 89 வீதத்தையும் எடுத்துக்கொள்கின்றனர். வளர்ச்சியடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஜனநாயகத்துக்கு பொருத்தமானது அல்ல. இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே அடுத்தடுத்து பல நாடுகளில் பாசிச பாணியிலான அதி-வலது அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

சகல நாடுகளிலும் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, மனித தேவைகளுக்காக உலகப் பொருளாதாரத்தை சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மறு ஒழுங்கு செய்வதன் மூலமே அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி போர், சுரண்டல் மற்றும் சமத்துவமின்மை இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க முடியும்.

வேலையின்மைக்கு முடிவுகட்டுவதற்காக!

நலன்புரி சேவைகளை தூக்கி நிறுத்துவதற்கு மேற்கொள்ளும் பிரமாண்டமான நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக, முதலாளித்துவத்துக்குள் இளைஞர்கள் முகங்கொடுக்கும் வேலையின்மை, பாதுகாப்பற்ற மற்றும் மலிவு ஊதியத்துடனான ஒப்பந்த தொழில்களுக்கு முடிவுகட்ட முடியும். சோசலிசத்தின் ஊடாக மட்டுமே, பெரும் பன்னாட்டுக் கூட்டுத்தானங்களின் கீழ் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒட்டு மொத்த ஆசியாவிலும் மற்றும் உலகம் முழுதும், இளம் தொழிலாளர்களின் எதிர்காலத்தை உயர்ந்த ஊதியம் மற்றும் சிறந்த தொழில் நிலைமைகளின் கீழ் பாதுகாக்க முடியும்.

தொழிலாள வர்க்க அரசியல் சுயாதீனத்துக்காக!

தொழிலாளர் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பின் மூலம் முதலாளித்துவ அரசாங்கத்தை தமது தேவைகளுக்காக வளைத்துப்போட முடியும் என போலி இடது கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) மற்றும் தொழிற்சங்கங்களும் பரப்பும் மாயையை IYSSE முற்றிலும் நிராகரிக்கின்றது. இந்த அமைப்புகள் முதலாளித்துவ அரசாங்கங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக முதலாளித்துவ கூட்டணிகளை அமைக்கும் பிற்போக்கு வேலைத் திட்டத்தின் கீழ், வெகுஜனங்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்களுக்கு பாதைகளை வகுத்துக் கொடுப்பதன் மூலம், முடிவில் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்திற்கும் சோசலிசத்துக்கும் எதிராக நிற்கின்றன.

அனைத்து விதமான இன மற்றும் மத பிரிவினைகளை நிராகரித்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்களை பொதுவான வர்க்க அவசியங்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கு IYSSE போராடுகின்றது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்று என பிரச்சாரத்தில் ஈடுபடும் IYSSE இந்தியத் துணைக்கண்ட பிராந்தியத்தில், சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை கட்டியெழுப்பும் போராட்டத்துக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டிய தீர்க்கமான நிலைமையை வலியுறுத்துகின்றது.

மாணவர்களின் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை அவர்களால் தனியே தீர்த்துக்கொள்ள முடியாததோடு மாணவர்கள் தொழிலாள வர்க்கத் தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரட்டப்பட வேண்டும். தொழிற்சங்கவாதத்தை நிராகரித்து தொழிலாளர்களின் மற்றும் மாணவர்களின் பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்காக வேலைத் தளங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்குள்ளும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப IYSSE அழைப்பு விடுக்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் கட்சி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தையே இந்த நடவடிக்கைகள் தீர்க்கமாக முன் கொண்டுவருகின்றன.

சோசலிச கலாச்சாரத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டுவதற்காக!

சோசலிச சமத்துவக் கட்சியுடனும் அதற்கு தலைமைத்துவம் கொடுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு.) உடன் ஒன்றிணைந்து, IYSSE இலங்கையிலும் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்திலும் சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அது 1917 ரஷ்யாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திய போல்ஷிவிக் கட்சியின் அரசியல் பாரம்பரியங்களில் காலூன்றிக்கொண்டுள்ளது. அதே போல், சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக, நான்காம் அகிலத்தை ஸ்தாபித்து, லியோன் ட்ரொட்ஸ்கி அனைத்துலக சோசலிசத்துக்காக முன்னெடுத்த போராட்டத்தின் ஒட்டுமொத்த அனுபவம் மற்றும் மரபுரிமையை அது கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய யுகத்துக்குள் வெகுஜனங்களின் வாழ்க்கை மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதில் தேசிய முதலாளித்துவத்தின் வரலாற்று இயலாமை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினர், தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே, வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற முடியும் என லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு தெளிவுபடுத்துகிறது. IYSSE இலங்கையிலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த முன்நோக்கில் கல்வியூட்டுவதற்காகவும் அணிதிரட்டுவதற்காகவும் போராடுகின்றது.

சோசலிசத்துக்கான போராட்டத்தில் இணைந்திடுங்கள்!

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைந்துகொள்ளுங்கள்!

உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் வெளியிடப்படும் பகுப்பாய்வுகள், வேலைத் திட்டங்கள் மற்றும் வரலாற்றையும் கற்குமாறு நாம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். IYSSE இல் இணைந்துகொள்வதற்கு முடிவெடுத்து உங்களது கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், வேலைத் தளங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் IYSSE கிளை ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு முன்நடவடிக்கை எடுத்து எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

SIGN UP FOR NEWSLETTER
close slider

Sign up for IYSSE Newsletter